Tamil nadu, chennai news, Sasikala VK, Sasikala, Jayalalithaa, Sasikala Age, Sasikala Cm, Sasikala Tamil Nadu, Sasikala Vk, Vk Sasikala, Indiatimenews
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அ.தி.மு.க.வினரால் அன்போடு அம்மா என்று அழைக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நிழலாக, அவரது நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணத்துக்கு பின்னர், அவரது இடத்துக்கு வேகமாகவே முன்னேறி வந்தது போலவே காட்சிகள் அரங்கேறின. அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது சர்வவல்லமை படைத்ததாகும்.
 கட்சியினர் அனை வரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரக் கோல் பொதுச்செயலாளரிடமே இருக்கும்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1988-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் 28 ஆண்டுகள் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒட்டு மொத்த அதிகாரம் படைத்த பதவியான இந்த பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா உடனடியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்கிற கோஷத்துடன் முதல்-அமைச்சர் பதவிக்கும் சசிகலா குறிவைத்தார்.
இதற்கு வசதியாக முதல் – அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் மட்டுமின்றி தமிழக மக்கள் மனதிலும் பூதாகரமாகவே வெடித்தது.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இதன் பின்னர் அரசியல் களம் சூடுபிடித்தது. பன்னீர்செல்வமும், சசிகலாவும் தனித்தனி அணியாக செயல் பட்டு வந்தனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இதனால் 10 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. சட்ட நிபுணர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் இடத்தை பிடித்து ஆட்சிக் கட்டிலிலும் சசிகலா அமர்ந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.