மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் 150 மீ. சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

மும்பை: மகாராஷ்டிர ஆளுநர் மாளிகைக்குக் கீழே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, அந்த சுரங்கப் பாதையை நேற்று பார்வையிட்டனர். இந்த சுரங்கப் பாதையை, அதன் பாரம்பரியம் பாராமல் பாதுகாக்குமாறு, பல்வேறு துறை நிபுணர்களுக்கும் ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.

சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் 20 அடி உயர இரும்புக் கதவு உள்ளது, அதனை திறந்து உள்ளே சென்றால், 13 அறைகளும், ஆயுதங்களை சேமிக்கும் கிடங்கும் உள்ளது.

இந்த ஆளுநர் மாளிகை 1885ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதால், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சுரங்கப் பாதை மூடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுரங்கப் பாதை என்றாலும், இதில் காற்று வசதி, வெளிச்சம் வர வசதி, கழிவு நீர் செல்லும் பாதை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பது பார்த்தவர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது.