ராமேசுவரம், Pamban bridge

விருதுநகர் மாவட்டம், கல்லூரணியை சேர்ந்த 12 பேர் வேனில் இன்று அதிகாலை சுற்றுலாவாக ராமேசுவரம் புறப்பட்டனர். வேனை அழகேசுவரன் (வயது 32) ஓட்டிச் சென்றார். 5.30 மணியளவில் வேன் பாம்பன் பாலத்தில் சென்றது. அப்போது மழை தூறியது. இதனால் டிரைவர் வேனை மெதுவாக ஓட்டினார். எதிர்பாராத விதமாக வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய வேன் அதே வேகத்தில் வலதுபுறம் நோக்கி பாய்ந்தது.

வேகமாக சென்ற வேன் பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தது. வேனின் முன் பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி நின்றது. வேனில் இருந்தவர்கள் அய்யோ அம்மா… என கூக்குரல் எழுப்பினர்.

தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். இன்னும் ஒரு அடி வேன் முன்னேறிச் சென்றிருந்தாலும் கடலுக்குள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக வேனின் முன்பக்க சக்கரம் மட்டும் பாலத்தின் வெளிப்புறம் தொங்கியபடி நின்று விட்டதால் 12 சுற்றுலா பயணிகளும் உயிர் தப்பினர். விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் ஒரு பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 15 பேர் பலியானார்கள். அதன் பிறகு ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.