பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு

மும்பை: மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல், பா.ஜ., கட்சியின் தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், தேர்தல் கமிஷன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தாமரை சின்னத்தை பா.ஜ.,விற்கு ஒதுக்கியது. அப்போது இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் தாமரை ஒரு புனிதமான மலராகவும், தனித்தன்மை வாய்ந்த மலராகவும் நமது புராண இதிகாசங்களில் போற்றப்படுகிறது. மேலும் இந்திய பாரம்பரியத்தில் ஒரு மங்களகரமான மலராகவும் கருதப்படுகிறது.இதேபோல் தூய்மை, சாதனை, நீடித்த வாழ்வு மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை எடுத்துரைக்கும் அடையாளமாகவும் தாமரை மலரை கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக தாமரை நமது தேசிய மலராகும்.

எனவே தாமரையை ஒரு கட்சியின் அடையாள சின்னமாக பயன்படுத்துவது தவறாகும். பா.ஜ., கட்சியின் சின்னமாக தாமரை மலர் பயன்படுத்தப்படுவதை, முறையற்ற பயன்பாடு தடுப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் கமிஷனிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது