பாதுகாப்புத் துறையின் வான்வெளியை விமானங்களுக்கு விரைவில் அனுமதி

பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வான்எல்லைகளைப் பயன்படுத்த தடை இருப்பதால் ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் அப்பகுதிக்கு மேலே பறக்க முடியாது. அருகில் விமான நிலையம் இருந்தாலும், ராணுவ வான்வெளியை சுற்றியே செல்ல வேண்டும். இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன் எரிபொருள் செலவு அதிகரித்து கார்பன் உமிழ்வும் அதிகம் ஏற்படுகிறது.

இந்த நிலையை மாற்றி, பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வான் எல்லையை பயன்படுத்துவது குறித்து விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசித்து வருகிறது.

அதன்படி, தடை செய்யப்பட்ட வான்வெளியை தற்காலிகமாக பயன்படுத்துவதை ஒருங்கிணைப்பதற்காக வான்வெளி மேலாண்மை பிரிவு உருவாக்கப்பட்டு, அந்த பிரிவானது டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் டிசம்பர் மாதம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வான்வெளி மேலாண்மை பிரிவில் விமானப்படை, கடற்படை அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன பிரதிநிதிகள், விமான நிலைய ஆபரேட்டர், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.

இதன் மூலம் சில மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வர்த்தக விமானங்கள் இயக்கப்படும். இது வெற்றிகரமாக அமைந்தால் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற வான்வெளி மேலாண்மை பிரிவு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.