ஆறுகளில் தண்ணீர் இல்லாதது கவலை அளிக்கிறது: நரேந்திர மோடி

நம் நாட்டு வரைபடத்தில் பல ஆறுகள் இருந்தபோதிலும் அவற்றில் தண்ணீர் இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நர்மதை நதியை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘நமாமி தேவி நர்மதே’ என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பாத யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை 150 நாட்களில் 1,100 கிராமங்கள், நகரங்கள் வழியாக 3,344 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது.

நர்மதை நதி உற்பத்தியாகும் மத்திய பிரதேச மாநிலம் அன்னூப்புர் மாவட்டம் அமர்கந்தக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, அதே இடத்தில் திங்கட்கிழமை முடிந்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பூஜை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:

”நம் நாட்டு வரைபடத்தில் பல ஆறுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் தண்ணீர் இல்லாதது கவலை அளிக்கிறது. இந்நிலையில், நாட்டின் முக முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாக விளங்கும் நர்மதை நதியை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் முயற்சி பாராட்டுக்குரியது.

நர்மதை நதியை பாதுகாப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் நகல் எனக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டம் யாரால், எப்போது, எப்படி செயல்படுத்தப்படும் என அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இது தொலைநோக்கு பார்வை கொண்ட மிகவும் சிறப்பான திட்டம். இதை மற்ற மாநிலங்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்.

நர்மதை நதியின் ஒவ்வொரு துளி நீரும் குஜராத் மக்களுக்கு மிகவும் முக்கியம் ஆகும். மத்திய பிரதேச மாநில அரசின் இந்த முயற்சிக்கு குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநில மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்தார்.