விமானப்படை விமானம் மாயமானது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் கடந்த வெள்ளிக்கிழமை (22-ந்தேதி) புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானது.

இதையடுத்து விமானப்படை விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருகிறதா என்பதை கண்டறிய, நீர்மூழ்கி கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுக்கும் பணிகளும் நடைபெற்றது. நான்கு நாட்கள் ஆகியும், மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், காணாமல் போன விமானம் தொடர்பாக பாதுகாப்பு துறை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ‘இந்திய விமானப்படை விமானம் மாயமானது குறித்து நாடே கவனித்து வருகின்றது. விமானத்தில் பயணித்த 29 பேரின் குடும்பங்களையும் இந்நிகழ்வு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே விமானத்தை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், யாருடைய தவறால் இவ்விபத்து நடந்தது என்றும், பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்’ என்றார்.