ஊக்க மருந்து விவகாரம் துரதிருஷ்டவசமானது: சுஷில்

இந்திய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான நரசிங் யாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நரசிங் யாதவ் விரைவில் ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள இருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் ரியோவில் பற்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, 74 கிலோ எடைப் பிரிவில் நரசிங் யாதவை அனுப்பக்கூடாது, தனக்கும் அவருக்கும் இடையில் போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவரையே ரியோவிற்கு அனுப்ப வேண்டும் என்று இரண்டு முறை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற சுஷில் குமார் முறையிட்டார். இதுகுறித்து கோர்ட் வரை சென்றும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை.

இதனால் ரியோ ஒலிம்பிக்கின் கனவு நிறைவடைந்த கவலையில் சுஷில் குமார் உள்ளார். இந்நிலையில் மல்யுத்த வீரர் ஒருவர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியது அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து சுஷில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மல்யுத்தம் இப்படி போய்க்கொண்டிப்பதை பார்ப்பதற்கு மிகவும் துரதிருஷ்டவசமாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையை மல்யுத்தத்திற்காக கொடுத்துள்ள நான், சக வீரர்களுக்காக எப்போதுமே ஆதரவாக இருப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.