மேனகா காந்திக்கு ஜல்லிக்கட்டு பேரவை கண்டனம்

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறிய கருத்துக்கு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு அபாயகரமான, ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சர் மேனகா காந்தி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் ராஜசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சரின் பேச்சு, தமிழர்களின் ஒட்டுமொத்த மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் வீரத்தையும், மானத்தையும் அடிப்படையாக கொண்டதாகும். இந்த விளையாட்டை நடத்த தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் பாகுபாடு ஏதுமின்றி போராடி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் வரும் பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றிட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வினை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது வருத்தமடைய வைத்திருக்கிறது. அவரது பேச்சினை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போக்கினை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.