சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும், படத்தின் பெயரும் பிப்ரவரி 2-ந்தேதி வெளியிடப்பட்டது.

அஜித் ‘சிக்ஸ்பேக்‘ உடலுடன் நிற்பது, உடற்பயிற்சி செய்வது, பனிமலையில் எந்திர துப்பாக்கியால் சுடுவது, பெரிய மரக்கட்டையை தூக்கி வருவது போன்ற பல்வேறு தோற்றங்களில் போஸ்டர்கள் வெளியாகின.

இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. ‘விவேகம்‘ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு ஹங்கேரி நாட்டில் நடந்து வருகிறது.

இயற்கை எழில்மிகுந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலயில் ‘விவேகம்‘ படத்தின் டீசர் அஜித் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வெளியாகவில்லை. பின்னர் 18-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 11-ந்தேதி டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.