மேகதாது அணை: கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் பதில் என்ன?

Karunanidhi, Karunanidhi Grandchildren, Karunanidhi Family Tree, Karunanidhi Caste, Karunanidhi Health, Karunanidhi Dead, Karunanidhi Death, Karunanidhi Profile, Karunanidhi Death Flash News

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் பதில் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி திறந்து விடாததால் டெல்டா பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. விவசாய சங்கங்களின் சார்பில் இதற்காக பெரும் போராட்டம் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூட கிடைக்காது என்பதால், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தான் நேற்று பெங்களூருவில் சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் மேகதாது அணைகட்டுத் திட்டம் பற்றி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதென்றும், மழை காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.

நமது முதல்வர் சுதந்திர தின விழாவில் என்ன பேசினார் என்று கேட் கிறீர்களா? விவசாய சங்கங்கள் நடத்தவுள்ள போராட்டங்கள் பற்றிப் பேசினாரா? காவிரியிலிருந்து உடனடியாக கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாரா? காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தாரா? தமிழகத்திலே ஏழைகளே இல்லை என்கிற நிலையை உருவாக்கப் போவதாக சூளுரை மேற்கொண்டிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அங்குள்ள அணைகள் நிரம்பிய வுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறுவையை இழந்து தற்போது சம்பாவையும் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே தான் தற்போது தமிழகத்திற்கு உபரியாக தங்களிடம் உள்ள நீரை வழங்கி வந்த கர்நாடகா, அந்த தண்ணீரையும் தேக்கி வைக்கும் வகையில், கர்நாடகாவிலே மேலும் இரண்டு அணைகளைக் கட்ட தாங்களாகவே முடிவு செய்து, மேகதாது என்ற இடத்தில் அவற்றைக் கட்டுவதற் கான ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது பற்றி கடந்த டிசம்பர் மாதமே, அந்த மாநில முதல்வர் சித்தராமையா “காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்தி வந்தது.

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்ட மிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வனப் பகுதியிலிருந்து மேகதாதுவுக்குச் செல்ல சங்கமத்தில் இருந்து அர்த்தாவதி ஆற்றின் குறுக்கே புதிதாகப் பாலம் கட்டும் பணி மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்டப் போவதாகவும், இதன் தொடர்ச்சியாக கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளுக்குக் கீழே நான்கு தடுப்பு அணைகள் கட்டி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் போவதாகவும், காவிரி கர்நாடக மாநிலத்திற்குள்ளே ஓடும்போது அதைப் பயன்படுத்திடக் கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளதால் தமிழக அரசோ, தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது என்றும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்த போதே, அதைப் பற்றி நான் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தேன்.

கர்நாடக அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளும் – பொதுமக்களும் தங்களுடைய கொந்தளிப்பை உணர்த்திடும் வகையில், 22-11-2014 அன்று முழு அடைப்புப் போராட்டத்தையும், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலோ, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திடுக” என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போது, “நீ யார் சொல்வதற்கு? பிறருடைய யோசனையை நான் ஏன் கேட்க வேண்டும்; எல்லாம் எனக்குத் தெரியும்” என்று எதேச்சாதிகாரத் தொனியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட முதல்வர் ஜெயலலிதா வாயே திறக்கவில்லை என்பதோடு, தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் இதுபற்றிக் கலந்தாலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தவில்லை. மாறாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினால், கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று கருதிக் கொண்டு அதையே செய்து காலங்கழித்து வருகிறார்.

தற்போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 19-8-2016 அன்றும், காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் 25-8-2016 அன்றும் நடத்துகின்ற போராட்டத்திலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விவசாயிகளுக்குப் பின்பலமாக இருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

ஆளுங்கட்சியோ, அல்லது வேறு ஏதாவது கட்சிகளோ அதற்கு முன்வரவில்லை என்றால் தமிழக விவசாயிகள் அவர்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள். பெருந்தன்மையோடு தமிழக அரசே முன் வந்து, விவசாயிகளின் இந்தப் போராட்டங்களை ஆதரித்து தமிழகத்தின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவது தான் ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்கும்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும், அனைத்துத் தரப்பினரும் இந்தப் பிரச்சினையின் அத்தியாவசியத்தை உணர்ந்து முழு ஒத்துழைப்பளித்திட முன்வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.